தமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

தமிழாக்கம் - விரிவாகப் பேசப்படவேண்டிய விடயம். அதற்கு முதலில் நீங்கள் நமது முதலாவது பதிவை படித்துவிட்டு வரவேண்டும். இணைப்பு இதோ:


தமிழாக்கம் என்பது என்ன? பிறமொழிச் சொற்களை தமிழ்ப்படுத்துவது. அதாவது பிறமொழிச் சொற்களுக்கான சரியான தமிழ்ப் பதத்தைக் கண்டறிவதாகும். எதையெதை மொழிபெயர்க்கலாம்? பெயர்ச்சொற்கள் தவிர்ந்த அனைத்தையும் மொழிபெயர்க்கலாம். ஏன் பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது? பெயர்ச்சொற்கள் குறிப்பிட்ட ஒருவரை அல்லது குறித்த ஒரு பொருளை விளிப்பதற்கு பயன்படுவது. பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்தால் சொல்லின் மூலம் சிதைந்து விடும். ஆகவே பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது.

தொடர்ந்து ஒருவிடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது கடந்த வருடம் (2015) டிசம்பர் மாதத்தில் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் அவர்களுக்கும் எனக்குமிடையில் பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது குறித்து நடந்த உரையாடலை இங்கே தருகின்றேன். 



# கவிஞர் மகுடேசுவரன் : செய்கோள் தொலைக்காட்சிச் சேவைக்கு டாடா நிறுவனக் குடையைப் பயன்படுத்துகிறேன். அதில் ஒரேயொரு ஆங்கில இசைக்காட்சி வாய்க்காலுக்கு (Music Channel) இணைப்பைப் பெற்றுக்கொள்ள விருப்பம். எந்த வாய்க்காலைத் தேர்ந்தெடுக்கலாம் ? முன்னாளில் எம்டிவி போன்றவற்றில் கண்ட ஆங்கிலப் பாடல்களின் காணொளிகள் நற்களிப்பைத் தந்தன. பிற்பாடு அவை வெறுமனே விளம்பூது நிகழ்ச்சிகளாய் மாறிவிட்டன. நான் அவற்றைப் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டேன். பார்க்கத் தகுந்த பாடற்காணொளிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகின்ற ஒரேயொரு வாய்க்காலைப் பரிந்துரையுங்கள்.

நான்: டாடா என்பது தமிழ்ப் பெயரா? (Tata is the tamil name? ) - என்ற கேள்வியில் துவங்கி பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்வது சரியா தவறா என்பது வரையில் நீண்டது. பின்...

கவிஞர் மகுடேசுவரன் : என்னுடைய தமிழ்ப்பணி உனக்குக் கிண்டலாகத் தெரிகிறதா ?

வாசகர் செந்தாமரை கொடி : சகோதரர் சிகரம் பாரதி அவர்களே பெயர்ச் சொற்கள் வேறு , மனிதனை சுட்டும் அடையாளமாம் பெயர் என்பது வேறு. தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை.

கவிஞர் மகுடேசுவரன் : எல்லாப் பெயரையும் எம்மொழியாக்கும் உரிமை எமக்குண்டு. எம்மொழிப்பெயரையும் அந்தந்த மொழியினர் அவர்க்கேற்றபடி ஆக்கிக்கொள்ளலாம். இதை நான் உன்னிடம் ஏற்கெனவே தெளிவாகக் கூறியிருக்கிறேன். ஈஸ்ட்வுட் என்பது ‘கிழக்குகட்டை’ . சூரியநாரயணன் ‘பரிதிமால்’தான். வேதாசலம் ‘மறைமலை’தான். என்பெயரையே தமிழில் ‘கொடுமுடியரசன்’ என்று ஆக்கி அழைக்கும் உரிமை தமிழர்க்குண்டு. ஆள்பெயர் கடவுச்சீட்டுத் தன்மை பெறுவதால் அவ்வாறு செய்வதில்லை. அதாவது மொழி வளர்ப்பில் ஊக்கத்துடன் செயல்படவேண்டிய அருஞ்செயல்கள் பல உள்ளதால் இதைச் செய்யாதிருக்கிறோம், தேவை நெருங்கின் செய்வோம் அவ்வளவுதான். இவற்றையெல்லாம் நான் முன்னொரு பதிவில் விரிவாக எடுத்துரைத்தேன். அவற்றை ஏற்கவில்லை என்றால் சரி, அமைதிகாக்க வேண்டும். முகநூல் என்பதை இந்நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறியவும்.

வாசகர்  செந்தாமரை கொடி : நல்ல விளக்கம் கவிஞரே..

வாசகர்  கவிஞர் ஜெயதேவன் : தொடர்ந்து உங்கள் வாதங்கள் பார்க்கிறேன். ஆங்கில மக்கள் மதுரையை அவன் வசதிக்கு மெஜுரா என்று அழைத்தனர். பல ஊர்கள் இவ்வாறே. அதே சமயம் அவன் பெயரை சேக்ஸ்பியர் என்பதை செகப்பிரியர் ஆக்கினோம்.அதுவும் நிற்கவில்லை. ஆகவே சரி தவறு என்பதை விட தொடர வாய்ப்பு உண்டா இல்லையா என்பதே  என் ஐயம்.

வாசகர் ராதாகிருஷ்ணன் செல்வராஜ் : விளம்பூது?

கவிஞர் மகுடேசுவரன் : விளம்பு ஊது. விளம்பி ஒலிக்கின்றன.

வாசகர் அனோஜன் திருக்கேதீஸ்வரன் : எல்லாச் சொற்களையும் நேரடியாக மொழிபெயர்ப்பதில் இருக்கும் அபத்தத்திற்கு இந்த நிலைத்தகவல் ஒரு நல்ல உதாரணம்.

கவிஞர் மகுடேசுவரன் : நான் ஒன்றும் தனித்தமிழ் சர்வாதிகாரி அல்லன். ஆனால் நான் தனித்தமிழில் எழுதுவதும் எழுத முயல்வதும் அதை எண்ணற்றோர் விரும்புவதும் பலரின் உறக்கத்தைக் கெடுக்கிறது என்பது தெரியும். தனித்தமிழுக்கு எதிரான உங்களுக்கு இருக்கும் நியாயங்களைவிட, என்னுடைய நியாங்கள் என்ன எளிதானவையா ?

வாசகர் அனோஜன் திருக்கேதீஸ்வரன் : மொழி நவீனமாதல் என்பது இயங்கியல் வளர்ச்சியில் இன்றியமையாதது. அதேபோல மொழியில் ஜனநாயகத் தன்மை அதிகரிக்கவேண்டியது அம்மொழியின் நிலைப்புக்கு அவசியமானது.

கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். உருவாக்கப்படும் கலைச்சொல்லானது சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சாதாரண மக்களும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கவேண்டும். இல்லையேல் அக்கலைச் சொல்லும் அல்லது அதே பொருளைக் குறிப்பதற்காய் உருவாக்கப்படும் ஏனைய சொற்களும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு அதன் மூலச்சொல்லையே பயன்படுத்தும் நிலை ஏற்படும். எம்மிடம் இதற்கு நல்ல உதாரணங்கள் பல உள்ளன.

சைக்கிளுக்கு மிதிவண்டி என்ற எளிமையான கலைச்சொல்லும் இருந்தது , துவிச்சக்கரவண்டி என்ற சாதாரண மக்களின் மொழியில் இருந்து சற்றே அந்நியமான கலைச்சொல்லும் இருந்தது. எளிமையான சொல்லை விடுத்து அந்நியமான சொல்லை பரப்ப முனைந்ததன் விளைவு, இப்போது மக்கள் இரு கலைச்சொல்லையும் தூக்கியெறிந்துவிட்டு 'சைக்கிள்' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

கலைச்சொல்லுருவாக்கம் என்பதன் நோக்கம் மொழிக்கு ஒரு புதிய சொல்லைச் சேர்ப்பது மட்டும் அல்ல. அது மொழியின் நவீனத்துவத்துக்கும் ஜனநாயகத்தன்மை அதிகரிப்புக்கும் உதவவேண்டும். அவ்வாறு இல்லாத போது உருவாகும் அக் கலைச்சொல் மொழியை மெல்லக் கொலை செய்யும்.

நேரடி மொழிபெயர்ப்பினால் கலைச்சொல்லை உருவாக்குதல், புலமையைக் காட்ட கலைச்சொல் உருவாக்குதல், மொழியின் தூய்மை எனும் பெயரில் பெயர்களை மொழிபெயர்த்தல் போன்றவை மிகவும் ஆபத்தானதும் அபத்தமானதுமாகும். மொழியில் இயங்கியலை சிதைக்கும் செயலாகும்.

கவிஞர் மகுடேசுவரன் : அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போகலாம் !

வாசகர் கவிஞர் ஜெயதேவன் : மன்னிக்கவும் சார். மொழிச் சர்வாதிகாரன் அல்ல என்று சொன்ன தாங்கள் இப்படி பட்டென்று சொல்லியிருக்கக்  கூடாது. அந்தக் கருத்து நியாயம் இல்லையா? பிடிக்காவிடில் எளிய வழி விருப்பக்குறி போட்டு விலகி விடலாம். உங்கள் பணியை காலம் கொண்டாடும்.
வாசகர் மஹிந்தீஷ் சதீஷ் : சொற்களைத் தத்தெடுத்துக் கொள்வதால் ஒரு மொழி அழியுமா வளருமா...? தனி ஆங்கிலம் என்று அடம்பிடித்தி்ருந்தால் இன்று வரை அம்மொழி நிலைத்திருக்க முடியுமா..?

கவிஞர் மகுடேசுவரன் : பிள்ளை பெற வழியில்லாதவர்களுக்குத் தத்தெடுப்பு ஒரு நல்ல வழி.

வாசகர் venkalukam  :  பிறக்கின்ற குழந்தை நன்றாக இருந்தால் நலம்.

வாசகர் சங்கர் நீதிமாணிக்கம் : Musical channel - என்பதற்கு இசைக்காட்சி வாய்க்கால் என்பதற்கு பதில் வேறு சிறந்த சொல்லுருவாக்கம் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன். Channel - ஒளியலைவழி அல்லது தொலையொளிபாதை அல்லது ஒளிப்பாதை, Musical - பண்ணிசை, நல்லிசை.

வாசகர் கணேசன் நடராஜன் : இப்போது நான் உணர்கிறேன் , தந்தை பெரியார் ஏன் தமிழ் மொழியை விமர்சித்தார் என்று. ( Now I realized, Why "Thanthai Periyar" Criticized Tamil language". ) #

இது மிக நீண்ட நெடிய விவாதம். என்னுடைய ஆரம்பக் கேள்வி மட்டும் ஏன் இங்கு இருக்கிறதென்றால் இவ்வளவை மட்டுமே என்னால் மீட்டெடுக்க முடிந்தது. காரணம் பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் என்னை அவரது பக்கத்தைப் பார்ப்பதில் இருந்து தடை செய்துவிட்டார். அதன் பின்னரே என்னால் இப்பதிவின் முதலாவது அத்தியாயம் எழுதி வெளியிடப்பட்டது. எந்தவொரு மொழிச் சொல்லையும் அது பெயர்ச் சொல்லாக அல்லது வர்த்தக நாமமாக இருப்பினும் கூட அதனை மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு செய்யும் உரிமை உண்டு என கவிஞர் மகுடேசுவரன் வாதிட்டார். ஆனால் நான் பெயர்ச் சொற்கள் மற்றும் வர்த்தக நாமங்களை மொழியாக்கம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை என வாதிட்டேன். இந்தக் கருத்து மோதலே என்னை அவரது பேஸ்புக் நட்பு வட்டாரத்தில் இருந்து தடை செய்யக் காரணமாய் இருந்தது.

மேலும் நான் 2015, நவம்பர் 05 இல் இப்படியொரு பதிவை விட்டதாக பேஸ்புக் வரலாறு சொல்கிறது:

# தமிழாக்கம் மற்றும் அது சார்ந்த சிக்கல்கள். 

தற்போது தமிழில் பிறமொழி அல்லது ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருக்கிறது. நாம் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்தேனும் ஆங்கில வார்த்தையாக இருக்கிறது. பிறமொழிகளின் ஆதிக்கம் தமிழின் மீது அதிகமாகக் காரணம் தமிழில் பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ப் புத்தாக்கம் விரைந்து இடம்பெறாமையாகும். தற்போது உலகம் உள்ளங்கையில் சுருங்கிவரும் வேளையில் தமிழாக்க முயற்சிகள் பரவலாக இடம்பெற்று வருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள். தமிழாக்கம் என்னும் எண்ணக்கருவை ஓரிரு வரிகளில் விளக்கி உரையாடிவிட முடியாது. அது பாரியதொரு எண்ணக்கருவாகும். தமிழாக்கம் தொடர்பில் இவ்வேளை உரையாட வந்தது அது தொடர்பில் காணப்படும் பிரதான சிக்கல் ஒன்றுக்கு தீர்வு காணும் எண்ணமே.

பிறமொழிச் சொற்களை - அதாவது - அன்றாடப் பயன்பாட்டுக்குரியவை, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் , தொழினுட்பச் சொற்கள் போன்றவற்றை கட்டாயம் தமிழ்ப்படுத்த வேண்டும். இவை அகராதிகளில் இடம்பெறும். அன்றாடப் பயன்பாட்டுக்கு உள்ளாகும். கல்வித் தேவைகளுக்கு துணை புரியும். பிறமொழி அறிவு அற்றவர்களுக்கு விளங்கிக் கொள்ள உதவும். ஆனால் பிறமொழியில் அமைந்தது என்பதற்காக பெயர்ச் சொற்களை தமிழ்ப்படுத்துவது முறையாகுமா என்பதே என் கேள்வி. பேஸ்புக் - ஐ முகநூல் என்று சிலர் பயன்படுத்திவந்தனர். தற்போது வாட்சப் - ஐ என்வினவி என்று கவிஞர் மகுடேசுவரன் தமிழ்ப்படுத்தியுள்ளார். இது பிழை என்பது என் வாதம்.

கவிஞர் மகுடேசுவரன் தமிழில் புத்தாக்கச் சொற்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உண்ணீர், உழுநீர், இருப்பூர்தி, விரைவிருப்பூர்தி, விலைத்தண்ணீர் போன்று பல புதுத் தமிழ்ச் சொற்களை அளித்து தமிழுக்கு அழகு சேர்க்கும் இனியவர். ஆயினும் கவிஞர் வாட்சப் - ஐ என்வினவி என்று தமிழ்ப்படுத்தியதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

வாட்சப் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு வர்த்தக நாமம். அது ஒரு பெயர்ச்சொல். பெயர்ச்சொல் மொழிகளைக் கடந்தது என்பது என் கருத்து. ஒரு வர்த்தக நாமத்தை தமிழ்ப்படுத்த வேண்டுமானால் அதனை அதன் உரிமையாளரே மேற்கொள்ள வேண்டுமேயன்றி நாமல்ல. அப்படியே செய்தாலும் ஏர்டெல், ரிலையன்ஸ், லக்ஸ், சர்ப் எக்செல் , டிட்டோல் , விக்ஸ் , நோக்கியா, சோனி , லாவா என இருக்கும் வியாபார நாமங்களுக்கும் ஒவ்வொருவரின் பெயர்களுக்கும் தமிழாக்கம் செய்ய நேரிடும். அது சாத்தியமில்லை ; பொருத்தமில்லை. 

ஆகவே பெயர்ச் சொற்களை தமிழாக்கம் செய்வது தவறாகும் என்பது என் கருத்து. இது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

பி.கு: இது கவிஞர் மகுடேசுவரனுக்கு எதிரான பதிவல்ல. பெயர்ச் சொற்களை தமிழ்ப் படுத்துவதற்கு மாத்திரம் எதிரான பதிவாகும். ஆரோக்கியமான விவாதக் களத்தை எதிர்பார்க்கிறேன். #

அடடே, நான் நல்லாத்தான் எழுதியிருக்கேன். இதுல எதுனாச்சும் பிழை இருக்கிறதா மக்களே? 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!