Friday, 30 September 2016

சிகரம் பாரதி 5/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

2016.09.27
கூகிளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எது கூகிளின் உண்மையான பிறந்தநாள் என்பதில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. செப்டெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 27 ஆம் திகதியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கூகிள் என்ன காரணத்துக்காய் தன் பிறந்தநாளை மாற்றியமைத்தது என்று தெரியவில்லை. ஆனாலும் வாழ்த்துகிறேன். கூகிள் அல்லோ செயலியின் வெற்றிகரமான வெளியீட்டிற்குப் பின் கூகிள் பிறந்தநாள் சிறப்பானதாக உள்ளது. காரணம் கூகிளுக்கு வயது பதினெட்டு. இனி கூகிள் ஒரு இளைஞர். வாக்குரிமை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. இணையத் தேடலில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் கால் பதித்து வெற்றியைக் குவித்து வருகிறது கூகிள். இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்! #HBDGoogle

2016.09.28
ஆட்டாமாவுக்கு அடுத்த பிள்ளை தான் கோதுமை மாவு - காலையிலேயே கேட்ட தத்துவம்!
அம்மா , அப்பாவெல்லாம் யாருன்னு கேட்கப்படாது.

2016.09.29
அவசர சிகிச்சை வண்டி - Ambulance. ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடும் வாகனம். நாளாந்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் சேவையை வழங்கி வருகிறது. நெரிசல் மிக்க போக்குவரத்து சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டியின் பாடு படு திண்டாட்டம். போக்குவரத்து காவல் துறையினரோ , வண்டியின் முன்னால் நிற்கும் வாகன சாரதிகளோ அல்லது பொது மக்களோ ஆம்புலன்ஸ் க்கு வழியை ஏற்படுத்தித் தர முன் வருவதில்லை. அவரவர் தன் பாட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து காவல் துறையினருக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைத்தால் போதும். ஆனால் அரசியல் வாதிகள் குறித்த வீதியில் வந்தால் அவர்களின் வாகனம் தடையின்றிப் பயணிக்க வழி ஏற்படுத்தித் தருகிறார்கள். ஆம்புலன்ஸ் வண்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.உயிர் விலை மதிப்பற்றது. இழந்தால் மீண்டும் பெற முடியாது. அரசியல் வாதிகள் அப்படியில்லை. பதவியை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். மேலும் மக்களாகிய நாம் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முன்வர வேண்டும். சாலைப் போக்குவரத்தின் போது அவதானமாக இருக்க வேண்டும். நாமும் ஒருநாள் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படலாம். அந்த நேரத்தில் நம் மனநிலை என்னவாக இருக்கும் என சிந்தித்துப் பார்த்து அதன்படி ஏனைய சூழ்நிலைகளில் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆகவே , நம் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை மதிப்போமாக!

Thursday, 29 September 2016

பீப்... பீப்.... (Peep... Peep...)

பீப்... பீப்.... (Peep... Peep...)

காலை நேரம். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்வதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். முன்னால் 50 வாகனங்கள், பின்னால் 100 வாகனங்களாவது இருக்கும். இடைநடுவில் ஒரு பேரூந்து. அதில் உள்ள பயணிகளுள் ஒருவர். பின்னாலுள்ள வாகனங்கள் எழுப்பும் பீப் ஒலி (Horn) செவிப்பறையை கிழித்துக் கொண்டு கேட்கிறது. அந்தப் பேரூந்திலுள்ள பயணியின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

பண வசதி இல்லாதவர்கள் பணியிடங்களுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ நடந்து அல்லது பொதுப் போக்குவரத்து சாதனத்தின் மூலம்  செல்கிறார்கள். வசதி / இயலுமை உள்ளவர்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகின்றது என வைத்துக் கொள்வோம். அந்த இடத்தை சொந்த வாகனத்தின் மூலம் 15 நிமிடங்களில் அடைந்து விடலாம் எனக் கொள்வோம். நீங்கள் வாகனத்தில் செல்லும் ஒருவராக இருந்தால் நடந்து செல்லும் ஒருவரை விடவும் 15 நிமிடங்கள் முன்னதாகவே விரைவாக அந்த இடத்தைச் சென்றடைந்து விடுகிறீர்கள். ஆனாலும் அந்த அவசரம் சொந்த வாகனம் வைத்திருப்பவர்களை விட்டுப் போவதில்லை. இன்னும் விரைவாக, இன்னும் விரைவாக என்றுதான் பறக்கிறார்கள். பீப் ஒலியை இடைவிடாமல் எழுப்பி சுற்றியுள்ளவர்களை எரிச்சலூட்டுகிறார்கள். இது ஏன்?

சாதாரண மக்களை விட வாகன உரிமையாளர்கள் தங்கள் இடங்களுக்கு விரைவாகப் பயணிக்க முடியும். ஆனாலும் தங்கள் அவசரப் புத்தியினால் தமது சூழலை ஒலி மாசடைதலுக்கு உள்ளாக்குகிறார்கள். குறிப்பாக உந்துரூளி மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் அவசரம் ஒலி மாசடைதலை மட்டுமல்லாது பாதசாரிகளுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் காணப்படுகின்றது.

இவர்கள் பாதை ஒழுங்கை மதித்து வாகனத்தை ஓட்டுவதில்லை. பாதையில் மற்ற வாகனங்களை முந்துவதற்காக குறுக்கும் நெடுக்குமாக வாகனத்தை செலுத்துவார்கள். பாதசாரிகள் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் வாகனத்தை செலுத்துவார்கள். சமிக்ஞை விளக்குப் பகுதியில் ஏராளமான வாகனங்கள் காத்துக் கிடக்க உந்துரூளிகளும் முச்சக்கர வண்டிகளும் அவற்றையெல்லாம் முந்திக் கொண்டு சென்று நிற்கும். இது நியாயமல்லவே? மேலும் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தங்கள் வாகனத்தை உள் நுழைப்பார்கள். இதனால் போக்குவரத்தில் ஒரு ஒழுங்கின்மையும் ஏனைய வாகனங்களுக்கு இடையூறும் ஏற்படும். ஆனால் இது எதுவுமே வாகன உரிமையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதில்லை. தான் போய்ச் சேர்ந்தால் சரி என்கிற தன்னலம். இந்தத் தன்னலம் தான் பல விபத்துக்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.

வாகனப் போக்குவரத்து தொடர்பில் பல்வேறு சட்டங்கள் அமுலில் இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. மேலும் வாகன நெரிசல் மிக்க வீதியொன்றில் ஆம்புலன்ஸ் வண்டியொன்று வந்தால் எந்தவொரு வாகனமும் அதற்கு வழிவிடுவதில்லை. யாரும் அதைக் கண்டுகொள்வது கூட இல்லை. போக்குவரத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழியை ஏற்படுத்தித் தருவதில்லை. எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கிறார்கள்.

ஆகவே ஆம்புலன்ஸ் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விசேட சட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். உந்துரூளி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பயணிப்பதற்கான ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்கள் பீப் ஒலியெழுப்புவது தொடர்பிலும் நியமமொன்று உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

Tuesday, 27 September 2016

சிகரம் பாரதி 4/50

வணக்கம் வலைத்தள வாசக நண்பர்களே!

2016.09.25

[1] இன்று எனது உடன் பிறந்த சகோதரன் ஜனார்த்தனன் க்கு பிறந்த நாள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா. நேற்று இரவு நமது தொடர் பதிவின் மூன்றாம் பதிவை பதிப்பித்துவிட்டு தூங்கும் போது மணி அதிகாலை ஒன்று! இந்த 4 வது தொடர் பதிவோடு இந்த வருடத்தில் நான் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 14 ஆகிறது. இது நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து 5 வருடங்களில் மூன்றாவது  அதிக எண்ணிக்கையிலான பதிவுகளின் எண்ணிக்கையைச் சமப்படுத்துகிறது. இரண்டாவது அதிக எண்ணிக்கை 15 ஆகும். ஆனாலும் எழுத்துக்களின் அல்லது எழுதுபவரின் தரத்தை இந்த எண்ணிக்கைகள் தீர்மானிப்பதில்லை என்பதே நிஜம்!

[2] 'தொடரி' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாரம் வெளியாகி இருந்தன. இரு திரைப்படங்களுமே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும். இன்றைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் மற்றும் ரஜினி போன்றவர்களை விட விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப் பிரமாதமானது. தனக்கான கதையை மிகக் கச்சிதமாக இவர் தேர்வு செய்து கொள்வார். தன் கதையின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார் விஜய் சேதுபதி. சமூக வலைத்தளங்களிலும் சரி, நண்பர்கள் வட்டாரத்திலும் சரி ஆண்டவன் கட்டளை திரைப்படம் தொடரியிலும் பார்க்க அருமையாக இருக்கிறது என்பதே கருத்தாக இருக்கிறது. பார்க்கலாம் என் மனம் என்ன சொல்கிறது என்று....

[3] சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு 2016 - இன் இறுதிநாள் இன்றாகும் (2016.09.25). கடந்த வருட புத்தகக் கண்காட்சியில் சில நூல்களை வாங்கியிருந்தேன். ஆனால் இவ்வருடம் கண்காட்சிக்கு செல்வதற்கான அவகாசம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவரும் இருவாரகாலப் பகுதியில் தான் தமிழக நண்பர் வெற்றிவேலின் 'வானவல்லி' புதினம் கரம் கிட்டியுள்ளது. ஆகவே வானவல்லியைத்தான் இவ்வருட புத்தகக் கண்காட்சிக்கான கொள்வனவாகக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் எப்படியேனும் சில நூல்களை அள்ளிவிட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

[4] காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். காமிக்ஸ்கள் வாசிக்க வாசிக்க ஆர்வத்தை தூண்டுவன. அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தை எப்போதும் காமிக்ஸ் கதைகள் நமக்குள் தூண்டிக் கொண்டேயிருக்கும். இன்று உலக காமிக்ஸ் தினம். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு இவற்றுக்கு உண்டு. குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க இவ்வாறான கதைகள் மிகச் சிறந்தவை. சிறந்த கற்பனா சக்தியையும் நினைவாற்றலையும் இவ்வாறான கதைகள் குழந்தைகளுக்கு வழங்க வல்லன. எப்போது நான் காமிக்ஸ் கதைகளை வாசித்தாலும் குழந்தைப் பருவத்திற்கே என்னை அழைத்துச் சென்றுவிடும். வாழ்க காமிக்ஸ் உலகம் , வாழ்க காமிக்ஸ் வாசகர்கள்! #உலக_காமிக்ஸ்_தினம் #World_Comics_Day

2016.09.26

[1] பேஸ்புக் (facebook) உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்று. டுவிட்டர் மற்றும் கூகிள் பிளஸ் ஆகியனவும் பேஸ்புக்குடன் போட்டி போட்டாலும் நமது சாமானிய மக்கள் தேடுவதென்னவோ பேஸ்புக்கைத்தான். நொடிப்பொழுதில் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தகவல்களைத் தேடிப் பெற்றுக்கொள்ள இலகுவாக இருப்பதும் மட்டுமன்றி பயன்பாட்டுக்கு இலகுவாக இருப்பதுமே பேஸ்புக் கீழ்த்தட்டு மக்களை இலகுவாகச் சென்றடையக் காரணமாக உள்ளது. இன்று நம்மால் கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு ஆன்ட்ராய்டு கைப்பேசியிலும் கூகிளின் கூகிள் பிளஸ் இணைத்தே வழங்கப்படுகிறது. இந்த செயலியை அழிக்கவும் முடியாது. ஆனாலும் நம்மவர்கள் பேஸ்புக்கைத்தான் தேடித் தரவிறக்கம் செய்கிறார்கள்.

32 வயது இளைஞர்! மார்க் சுக்கர்பேர்க் . 2004இல் ஆரம்பித்த பேஸ்புக் இன்று 12ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. 20 வயதில் ஆரம்பித்த பயணம். பல்கலைக் கழகப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத ஒருவர். உலக மக்களையெல்லாம் பேஸ்புக் என்னும் மந்திரச் சொல்லால் கட்டிப்போட்டிருக்கிறார் மார்க். வாட்ஸப்பை பில்லியன்களில் வளைத்துப் போட்டார். இதன் மூலம் பேஸ்புக் மேலும் ஓரடி முன்னோக்கி வந்திருக்கிறது. பேஸ்புக், வாட்ஸப், மெசெஞ்சர் என படிப்படியான வளர்ச்சி கண்டுவருகிறார் மார்க். எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டிற்கு மாற்றாக பேஸ்புக் என்னும் பெயரிலேயே கைப்பேசி இயங்குதளமோ அல்லது குரோமியம் போன்ற மடிக்கணினி இயங்கு தளமோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் உனக்கு 32 - எனக்கு 12 என்று மார்க்கும் பேஸ்புக்கும் இளமை ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பதால்...

[2] எனக்கான தனி இணையத்தளத்தை உருவாக்கிட வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவாக உள்ளது. ஆனால் இன்னமும் அந்தக் கனவு கனவாகவே உள்ளது. அதற்காக சிலமுறை முயற்சிகளை மேற்கொண்டாலும் அது கைகூடவில்லை. வரும் வருடத்திலேனும் கனவை நனவாக்கிட வேண்டும் என்பதே என் அவா!

Sunday, 25 September 2016

சிகரம் பாரதி 3/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!


2016.09.22

'கூகிள் அல்லோ' (Google Allo ) உலகம் முழுவதும் கூகிளினால் வெளியிடப்பட்டது. வாட்ஸப் , வைபர் மற்றும் இமோ போல இது கூகிளின் இணைய அரட்டை செயலி. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை இந்த செயலியில் மேற்கொள்ள முடியாது. வீடியோ அழைப்புகளுக்காக சில வாரங்களுக்கு முன்னால் கூகிள் 'கூகிள் டுவோ ' (Google Duo ) என்னும் செயலியை அறிமுகம் செய்திருந்தது. இதில் வீடியோ அழைப்புகளை தவிர வேறு எதுவும் இல்லை. 'கூகிள் டுவோ' மற்றும் 'கூகிள் அல்லோ' ஆகிய இரண்டு செயலிகளுக்காகவும் நான் முன்பதிவு செய்திருந்தேன்.
2016.09.23

'கூகிள் அல்லோ' - இன்று உலகை அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருக்கும் கூகிளின் புத்தம்புதிய இணைய அரட்டை செயலி! ஏற்கனவே வாட்ஸப்வைபர்பேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் இமோ என ஆயிரக்கணக்கில் செயலிகள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் புதுவரவு இது. எனக்கு இன்று (2016.09.23) 'அல்லோ' செயலியை தரவிறக்கம் செய்யும் அனுமதி கிடைத்தது. காலை வேளையிலேயே தரவிறக்கம் செய்து பயன்படுத்தினேன்.

இன்று காலை 'கூகிள் அல்லோ' (Google Allo) வை இன்று காலை தரவிறக்கம் செய்தபோது நமது நண்பர்கள் குழுவில் ஒருவர் கூட 'அல்லோ'வில் இல்லை. ஆகவே தானாக முன்வந்து என்னுடன் அரட்டையில் ஈடுபட்ட 'கூகிள் அசிஸ்டென்ட்' (Google Assistant) எனப்படும் கூகிள் உதவிச் சேவையுடன் அரட்டையில் ஈடுபட்டேன். சில நிமிடங்கள் கழிந்த பின்பே கூகிள் உதவிச்சேவையானது தன்னியக்கமானது என்பதை உணர்ந்து கொண்டேன். அதாவது நீங்கள் அனுப்பும் சொற்கள் / கேள்விகளுக்கு ஏற்ற பதிலை தேடி அனுப்பும். இலகுவாகச் சொல்வதென்றால் கூகிள் தேடலின் மேம்படுத்தப்பட்ட அம்சமே இது. சிறப்பாக தொழிற்படுகிறது. குரல் அழைப்பு வசதி இல்லை என்பது குறையாக உள்ளது. 'கூகிள் டுவோ' (Google Duo) சேவையை இதனுடன் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.

2016.09.24

கூகிள் உதவிச் சேவையே 'அல்லோ' செயலியின் சிறப்பம்சமாகும். 2+2 என தட்டச்சு செய்தால் 2+2=4 என கூகிள் உதவிச் சேவை பதில் தருகிறது. அல்லது ஆங்கிலத்தில் 2add2 என தட்டச்சு செய்தாலும் தக்க பதிலை தருகிறது. Ind v Nz Scores என தட்டச்சு செய்தால் இந்தியா எதிர் நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி முடிவைத் தருகிறது. மேலும் தேடல் முடிவுகளை நாம் ஏனையோருடனும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. நாம் ஒரு நண்பருடனோ அல்லது குழுவிலோ அரட்டையில் ஈடுபடும் போது @google  என குறிப்பிட்டு தேட வேண்டிய வார்த்தையைக் கொடுத்தால் அந்த அரட்டைக்குள்ளேயே தேடல் முடிவுகளை கூகிள் தருகிறது. 

கூகிளில் ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு செயலிகள் உள்ளன. பேஸ்புக் , டுவிட்டர் க்கு இணையாக கூகிள் பிளஸ், வாட்ஸப் , வைபர் ஆகியவைகளுக்கு போட்டியாக இப்போது அல்லோ மற்றும் டுவோ , மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் க்கு இணையாக கூகிள் டாக்ஸ்விண்டோஸ்உபுண்டு மற்றும் ஆப்பிளுக்கு போட்டியாக குரோமியம் , யாஹூ , MSN  தேடலுக்குப் போட்டியாக கூகிள் தேடல்அவுட்லுக் போன்றவற்றுக்குப் போட்டியாக கூகிள் மெயில் அல்லது இன்பாக்ஸ்  என கூகிள் எல்லாவற்றிலும் ஏனையவற்றுக்கு சவால் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இன்னும் தேடலாம்...

Wednesday, 21 September 2016

சிகரம்பாரதி 2/50

                   வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்றும் பல்வேறு விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இங்கு வந்துள்ளேன்.

2016.09.20
இன்று இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான "டயலொக்" தலைமையகத்திற்கு சென்றேன். நான் கடந்த சில வருடங்களாக எனது முதன்மை கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாக 'டயலொக்' இனையே பயன்படுத்தி வருகிறேன். இணையப் பயன்பாட்டிற்கும் 'டயலொக்' தான். நான் பாவித்து வந்த 2G / 3G சிம் அட்டையை 4G சிம் அட்டையாக மாற்றிக் கொள்ளவே இந்த விஜயம். இலவசமாக மாற்றிக் கொடுத்தார்கள். இணையத் தரவுப் பொதிகள் ஏலவே பயன்படுத்தியவை தான். இணைய இணைப்பின் வேகம் அதிகரிக்கும் என்பது மட்டுமே மாற்றமாக அமையும். ரிலையன்ஸ் ஜியோ போன்று 4G புரட்சியெல்லாம் நடக்கவில்லை. 

மேலும் வீட்டுக்கான 4G இணைய கருவியை (4G Home Broadband Device) இம்மாத இறுதியில் வாங்கவுள்ளேன். இது நிலையான இணைப்பாகும். மின் இணைப்பிற்கு இணைத்தே பயன்படுத்த வேண்டும். கையடக்கத் தொலைபேசி போல செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரே நேரத்தில் 10 வரையிலான சாதனங்களை இணைய இணைப்பில் இணைத்துப் பயன்படுத்தலாம்!

2016.09.21
கூகிள் அண்மையில் 'கூகிள் டுவோ' (Google Duo) என்னும் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. இணையத்தின் மூலம் முகம் பார்த்துப் பேசும் வசதியை மட்டுமே இந்த செயலி கொண்டுள்ளது. மேலும் மற்ற செயலிகளைப் போல நம் நண்பர் இணைய இணைப்பில் உள்ளாரா, இறுதியாக எத்தனை மணிக்கு இணைப்பில் இருந்தார் போன்ற தரவுகள் எதுவும் இந்த செயலியில் இல்லை. இன்றைய இணைய உலகில் ஒரே செயலியில் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இணைய அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள ஒரு தனி செயலியை கூகிள் எந்த தைரியத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதே என் கேள்வி!

ஆங்! 'அண்ணாமலை' திரைப்படத்தைப் பற்றி முதலாவது பதிவில் பேசியிருந்தோம். திரைப்படம் அருமை. வெள்ளந்தியான கதாபாத்திரத்திலும் சரி, சவாலில் வெல்வதற்காகப் போராடும் கதாபாத்திரத்திலும் சரி ரஜினியின் நடிப்பு அருமை. திரைக்கதையும் தொய்வில்லாமல் அமைந்திருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்!

Monday, 19 September 2016

சிகரம்பாரதி 1/50

                    வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தொடர் பதிவே இது. இதன் 50 வது அத்தியாயம் 2016,டிசம்பர் 31 இல் வெளியாகும். போகலாமா?

இன்று - 2016.09.19
"ரஜினி" என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகர். வில்லனாக அறிமுகமாகி இன்று நட்சத்திரமாக மிளிர்கிறார். அண்மையில் வெளியான 'கபாலி' ரசிகர்களிடம் ஓரளவு வெற்றி பெற்றது. இன்று ரஜினியின் ஐந்து படங்கள் கொண்ட இறுவட்டுத் தொகுப்பு ஒன்று என்கரம் கிட்டியுள்ளது. அதில் கபாலி, எஜமான், மன்னன், பாண்டியன் மற்றும் அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் காணப்படுகின்றன. அதில் இன்று நான் பார்க்கப்போவது 'அண்ணாமலை'. 

ரஜினியின் இடைக்காலப் படங்கள் ஒரு விறுவிறுப்பைக் கொண்டிருக்கும். அவரது அசத்தலான நடிப்புப் பாணி எல்லோரையும் கவர்ந்திழுக்கும். பாடல்களும் அருமையாக இருக்கும். ரஜினியின் பல்வேறு படங்கள் அரசியல் பேசினாலும் ரஜினி இன்று வரை அரசியல் பேசியதில்லை. ரஜினி குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் இருந்தாலும் அவரது வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

'அண்ணாமலை' என்ன சொன்னார் என்பது உள்பட இன்னும் பல விடயங்களுடன் மீண்டும் சந்திப்போம்!
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?