Monday, 27 June 2016

புதிய சொல் !

                    வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இந்த இருபத்தொன்றாவது நூற்றாண்டு புதுமைகள் நிறைந்தது. தொழிநுட்பம், அறிவியல், சமூகம், இலக்கியம் என அனைத்திலும் நாள்தோறும் புதிய விடயங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய விடயம் குறித்து இன்று பேசவுள்ளோம். பேசலாம் வாங்க.

                "புதிய சொல்" - இலங்கையின் இலக்கியத்துறையில் புதுவரவாய் தடம்பதித்துள்ள ஓர் காலாண்டு சஞ்சிகை. யாழ் மண்ணைக் தளமாகக் கொண்டு இவ்வாண்டு (2016) ஜனவரி முதல் வெளிவரத்துவங்கியுள்ளது. காத்திரமான படைப்புகளுடன் களம் கண்டுள்ள "புதிய சொல்" தொடர்ந்தும் இதே பாதையில் தடம் மாறாமல் பயணிக்க வேண்டும்.

               இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் சஞ்சிகைகளுக்கு முக்கியமான பங்குண்டு. தோன்றுவதும் பின் சுவடில்லாமல் மறைந்து போவதுமாய் பல்வேறு தமிழ் சஞ்சிகைகள் இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் வேரூன்ற முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றதென்னவோ ஒரு சில சஞ்சிகைகள் மட்டுமே. 'புதிய சொல்' வெற்றி பெறுமா என்பதை காலயந்திரத்திடம் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்.

சஞ்சிகையின் விபரங்கள்:

பெயர்                 : புதிய சொல்
முதல் பிரதி      : ஜனவரி - மார்ச் 2016
ஆசிரியர் குழு : தி.சதீஷ்குமார்
                                 கிரிஷாந்
                                 அருண்மொழி வர்மன்
தொடர்புக்கு    : சி.கிரிஷாந்
                                 கேணியடி லேன்
                                 திருநெல்வேலி
                                 யாழ்ப்பாணம்.

              இலக்கியத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் தினசரி வாசிப்பை விட சஞ்சிகைகளின் வாசிப்புக்கே முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் தினசரிகள் இலாப நோக்கில் இயங்குபவை. ஆனால் சஞ்சிகைகள் அவ்வாறல்ல. மொழிக்கும் இலக்கியத்திற்கும் அளப்பரிய பங்காற்றி வருகின்றன. விதி விலக்கானவையும் உண்டு. மேலும் சஞ்சிகைகளை நடத்துபவர்கள் இலாபத்தை எதிர்பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தையும் கைவிடாமல் அழைத்துச் சென்று விடுகின்றனர்.

          சஞ்சிகைகள் வாசிப்புக்கு முக்கியத்துவம் தரும் அதேநேரம் தினசரிகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்களிப்பையும் நாம் மறக்கலாகாது. என்றாலும் சஞ்சிகைகளின் அளவுக்கு முழுமையான பங்களிப்பை அவற்றால் வழங்க முடியாது. தற்போது இலாப நோக்கில் தினசரிகளை வெளியிடுவோர் அந்த இலாபத்தை இலக்கியத் துறையிலும் அடைந்துவிட வேண்டும் என்று சஞ்சிகைத் துறையிலும் கால் பதித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் இலக்கியத்தை தரம் தாழ்த்துமே தவிர காப்பாற்றாது.

                 தற்கால சூழ்நிலையில் சஞ்சிகைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைப்பதும் பின் காணாமல் போவதுமாய் இதே சூழ்நிலை தொடருமானால் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். 'புதிய சொல்' தமிழ் இலக்கியத் துறையில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது, எத்தகைய பங்களிப்பை வழங்கவுள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, 26 June 2016

அகவை பத்தில் சிகரம்!

                    வணக்கம் வாசகர்களே! உங்கள் அனைவரையும் வலைத்தளம் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தைத் துவங்கி ஜூன் முதலாம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. பதினோராம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் எண்ணங்கள் அனைத்தையும் செயலாக்கும் வல்லமை நமக்கு வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு முன்செல்வோம்.

                    மிக நீண்ட நாட்களுக்குப் பின் வலைத்தளம் மூலமாக சந்திக்கிறோம். வாசிப்புக்கும் எனக்கும் இடையில் நேர்ந்த இடைவெளி வலைத்தளத்துடனும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. குறைந்தபட்சம் தினசரிகளைக் கூட வாசிக்க அவகாசம் இல்லாது போய்விட்டது. வாசிப்பின் வாசனை இல்லாமல் எழுத்துக்களுக்கு எம்மால் கட்டளை இடமுடியாது. ஐந்து மாதங்களுக்குப் பின் இன்று தான் நூலகம் சென்றேன். புத்தகங்களைக் கண்டதும் மனதினுள் அளவில்லா ஆனந்தம்.

                   இனி குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு பதிவு அல்லது ஒரு மாதத்திற்கு மூன்றுக்கு குறையாத பதிவு இடவேண்டும். மாதத்தில் ஒரு முறையேனும் நூலகம் செல்ல வேண்டும். புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும். இம்மூன்றையும் தொடர்ந்து செய்வதே இப்போதைய இலக்கு.

நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்!
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?