Monday, 30 June 2014

வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல்.

"வலைச்சரம்" பற்றி அறியாத யாருமே தமிழ் வலைப்பதிவர்களாக இருக்க முடியாது. புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துதல், வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதன் மூலம் ஆசிரியராக வருபவரின் வலைத்தளத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் பிறர் அறிய வாய்ப்பளித்தல் என பல சேவைகளை வலைச்சரம் ஆற்றி வருகிறது.

வாரம் ஒரு ஆசிரியர் தனக்குப் பிடித்த , தான் அறிந்த வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார். அந்த வகையில் பலரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக காத்து நிற்கும் இந்த வேளையில் "சிகரம்பாரதி" ஆகிய என்னைத் தேடி வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வந்திருக்கிறது. 30.06.2014 முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கும் நான் 06.07.2014 வரை வலைச்சரம் ஆசிரியராக எனது கடமையை ஆற்றவுள்ளேன்.

இதுவரை மூன்று முறை வலைச்சரம் சார்பாக அறிமுகம் பெற்றுள்ள நான் இன்று ஏனையோரை அறிமுகம் செய்யக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும்.

என்னை அறிமுகம் செய்த பதிவுகள் இவைதான்.

நான் வாசிப்பவர்கள்...

புத்தம் புது காலை

வீட்டில் தோட்டம் , சாலையில் பணம்!!!

வலைச்சர ஆசிரியப் பணிஏற்கவுள்ள நான் பின்வருமாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்:

"நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க சிகரம் என்னும் தளத்தில் எழுதி வரும் சிகரம் பாரதி இணக்கம் தெரிவித்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

துரைசாமி லெட்சுமணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சிகரம்பாரதி ஆகிய இவரது பிறப்பிடம் இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான மலையகத்திலுள்ள கொட்டகலை என்னும் இடமாகும். தரம் 13 வரை கல்வி கற்றுள்ள இவர் பல்கலைக்கழக

வாய்ப்புக் கிடைத்தும் அதை ஏற்காமல் கொழும்பிலுள்ள ஈஸ்வரன் என்னும் தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் உதவியாளராக [Material Controller Assistant] பணி புரிந்து வருகிறார்.

தமிழகத்தில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னாள் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக கூலிகளாக அழைத்து வரப்பட்ட இவரது சமூகத்தின் அவலத் துயர் துடைத்து சமூகத்தை முன்னேற்றுவதே இவரது வாழ்நாள் இலட்சியமாகும். 2012 முதல் வலைப்பதிவுகளை எழுதி வருகிறார். . அரசியல்,இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை , சுயமுன்னேற்றம் என பன்முகப்பட்ட விடயங்களையும்
பலித்து வருகிறது.


சிகரம்பாரதி" என்னும் பெயரிலேயே பலராலும் அறியப்பட்டுள்ள இவர் அப்பெயரிலேயே தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்.

இலங்கையின் பல்வேறு தேசிய தமிழ் நாளிதழ்கள் சஞ்சிகைகளில் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.
இவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

அகவை ஒன்பதில் சிகரம்!
http://newsigaram.blogspot.com/2014/06/agavai-onbadhil-sigaram.html#.U6R3kLFGMi4


” சிகரம் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
 

நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி ."

                    வேலை மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக இதுவரை எந்தவொரு தயார் படுத்தலும் இல்லை. இறைவன் தான் சாரதியாக இருந்து இப்பயணத்தை வழிநடத்திக் கொடுக்க வேண்டும். வலைத்தள நண்பர்களாகிய நீங்களும் தினமும் வலைச்சரம் வந்து வாழ்த்த வேண்டும் , குறை நிறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
இப்படிக்கு,
அன்புடன்,

சிகரம்பாரதி.

Tuesday, 17 June 2014

ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [01]

                      வணக்கம் வலைத்தள வாசகர்களே! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நலமா? நான் நலம். கொஞ்சம் அதிகம் இடைவெளி எடுத்துக்கொண்டேன் போலிருக்கிறது. மன்னிக்கவும்.

                   நாம் நமது சமூக சூழலில் தினசரி பல விடயங்களை அவதானிக்கிறோம். அவற்றில் பலவற்றை பதிவுகளாகவோ கலந்துரையாடல்கள் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில விடயங்கள் பற்றி அதிகம் பேச - பகிர ஆர்வமில்லாதிருக்கும். ஆனாலும் சுருக்கமாகவேனும் சொல்ல நினைப்போம். அவ்வாறான விடயங்களை இலக்கமிட்டு பகிர்வதே இப்பதிவின் நோக்கம். வாருங்கள் பேசலாம்.

ஒன்று:
முதலாவது விடயமே ஒரு சந்தேகம். அதுவும் என் பதிவின் தலைப்புக் குறித்து. அது என்னவோ? இது தான். எழுத்து வழக்கில் ஒன்று என்று குறிப்பிடுவதை நான் பேச்சு வழக்கில் 'ஒன்னு' எனக் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது சிறிய அல்லது இரட்டை சுழி 'ன' வரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சரியா? அல்லது மூன்று சுழி 'ண' வரிசையில் 'ஒன்ணு' என்று குறிப்பிட வேண்டுமா?

இரண்டு:

 

"புறாவுக்குப் போரா? பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது?" என்று வடிவேலு பேசுவதாக 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அது போன்று தான் அமைந்திருக்கிறது இலங்கையின் தலைநகரில் ஒரு ஒழுங்கைக்கு [Lane] பெயர் வைக்கும் விவகாரம். கடந்த வருடம் கொழும்பு வெள்ளவத்தை நகரில் கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்திருக்கும் 57 வது ஒழுங்கைக்கு "தமிழ்ச் சங்க ஒழுங்கை" என்று பெயர் மாற்றம் செய்ய தமிழ் ஆர்வலர்களால் தீர்மானிக்கப்பட்டு கொழும்பு மாநகர சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழ் ஆர்வலர்கள் பல வழிகளிலும் தமது முயற்சிகளை தொடர்ந்தனர். ஆனால் இறுதி விளைவு பெயர்ப் பலகையில் "தமிழ்" நீக்கப்பட்டு "சங்கம் ஒழுங்கை" மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பெயர்ப் பலகை மீது கூட தமது இன வாதத்தைக் காட்டுபவர்கள் குறித்து என்ன சொல்ல?

 

இது குறித்து நான் வலைத்தளமொன்றில் கண்ட பதிவு இது:

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!


மூன்று:

கோச்சடையான்- நடிப்புப் பதிவாக்கத் தொழிநுட்பம் மூலம் படமாக்கப்பட்ட முதல் முப்பரிமாணத் தமிழ்த் திரைப்படம். கடந்த மாதம் உலகெங்கும் பல தடைகள், தாமதங்களுக்குப் பின்னர் வெளியானது. நானும் கொழும்பு மாளிகாவத்தை ரூபி திரையரங்கில் ரூ 300 கொடுத்து படத்தை ஆவலோடு பார்த்தேன். ஆனால் என்னால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. முப்பரிமாணத் திரைப்படத்தை இரு பரிமாணத் திரைப்படமாகத்தான் இங்கு வெளியிட்டிருந்தார்கள். அது கூடப் பரவாயில்லை. ஆனால் dts ஒலித்தொழினுட்பம் இல்லை. stereo ஒலியில் தான் திரையிட்டார்கள். அதனால் தான் திரைப்படத்துடன் ஒன்ற முடியாது போய்விட்டது. மற்றபடி திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம், அதற்கான உழைப்பு எல்லாமே அருமை.


ஒரு படைப்பை நான்கு வரிகளில் தாறுமாறாக விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அப்படைப்பை உருவாக்குபவருக்கு மட்டுமே அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியும். கோச்சடையானை பொம்மைப் படம் என்று விமர்சிப்பது இலகு. 120 கோடி ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொட்டி தமிழுக்கு ஒரு கௌரவத்தை வழங்கியிருக்கிறது என்பதை ஏற்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடினமான பணியை நாம் ஏற்றாக வேண்டும். காரணம் நாளை மேற்குலகத் திரைப்படங்கள் எல்லாமே நடிப்புப் பதிவாக்கத் தொழிநுட்பத்தில் தான் வருமாக இருந்தால் நாமும் அதற்குத் தயாரானவர்களாக- போட்டியிடக் கூடியவர்களாக இருக்க வேண்டுமல்லவா? கோச்சடையான் பற்றி தனி விமர்சனம் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தேன். கைகூடவில்லை.

நான்கு:
நாலு எல்லாம் இல்லை. இன்று - இப்போதைக்கு மூன்று தான். மீண்டும் சந்திப்போம். ஆரோக்கியமான எதிர்வினைகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிக்கு,
அன்புடன்

சிகரம்பாரதி.

Sunday, 8 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10 - முன்னோட்டம்!

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01


பகுதி - 02


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

பகுதி - 03


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

பகுதி - 04


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

பகுதி - 05


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05
பகுதி - 06


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06

பகுதி - 07


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07

பகுதி - 08

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 09


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02
http://3.bp.blogspot.com/_mCQCUdBDa_U/TTAqLGb06dI/AAAAAAAARqo/_tyARMUhKnA/s1600/actress-roopika-tamil-1.jpgவணக்கம் வலைத்தள வாசகர்களே!


"கல்யாண வைபோகம்" நமது "சிகரம்" வலைத்தளத்தின் ஆரம்ப கால வாசகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு குறு வலை நாவல். 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை வெளிவந்து பின்னர் இடைநடுவில் கைவிடப்பட்ட ஒன்றாகிப்போனது. அதன் பின்னர் மீண்டும் தொடரும் என சில அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும் - பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் கானல் நீராகிப்போன நிஜம் நாமறிவோம்.

இதோ மீண்டும் காலம் கனிந்திருக்கிறது. "கல்யாண வைபோகத்தினை" சிறப்புற நடத்திட திருவருள் கைகூடி வந்துள்ளது. இம்முறை அறிவிப்பு பொய்யல்ல. நிஜமாக்கிட சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவ்வறிவிப்பை வெளியிடுகிறோம்.

அன்பின் வாசகர்களே, நமது "சிகரம் குழும வலைத்தளங்கள்" இல் ஜூன் 01 முதல் "சிகரம் 3" என்னும் வலைத்தளம் இணைந்து கொண்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். "கல்யாண வைபோகம்" இன் முன்னைய 09 அத்தியாயங்களும் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் "சிகரம் 3 " வலைத்தளத்தில் 2014-06-07 முதல் 2014-ஜூலை-01 வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஒரு அத்தியாயம் என்ற அடிப்படையில் வெளியிடப்படும். புதிய வாசகர்களை ஈர்க்கவும் பழைய வாசகர்களுக்கு ஒரு மீட்டலை உருவாக்கிக் கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும். அல்லது இருக்கவே இருக்கிறது , அனைத்து இணைப்புகளும் இப்பதிவின் தொடக்கத்திலேயே. ஒரே மூச்சில் கூட வாசித்து முடித்து விடலாம்.

ஆனாலும் நீங்கள் புத்தம்புதிய அத்தியாயமான 10 ஆம் அத்தியாயத்தை வாசிக்க ஜூலை -05 வரை காத்திருக்க வேண்டும். அந்த நாளில் இருந்து இரு வலைத்தளங்களிலும் சம நேரத்தில் வலை நாவல் வெளியாகும். இப்போது மகிழ்ச்சி தானே?

"கல்யாண வைபோகம்" இனை இனிதே நடத்தி முடித்திட கைகோர்த்திடுங்கள் எம்மோடு.

அனைவரும் வருக. "கல்யாண வைபோகம் - இரு வீட்டார் அழைப்பு"

********


"கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல்
இனை "சிகரம் 3"
வலைத்தளத்தில் வாசித்திட:
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

Sunday, 1 June 2014

அகவை ஒன்பதில் சிகரம்!


                  வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஒரு கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தை ஆரம்பித்த "சிகரம்" வலைத்தளம் வரை வேர்விட்டு தனது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறது.

                 நாம் அறிந்ததை பிறரும் அறிய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் "சிகரம்". 2003 ஆம் ஆண்டிலிருந்து எனது எழுத்து முயற்சிகள் பல இருந்தாலும் 2006 இல் துவங்கிய "சிகரம்" தான் வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது. தரம் 11 இல் கல்வி கற்ற போது உருவாக்கப்பட்ட "சிகரம்" கையெழுத்து சஞ்சிகை 2009 வரை தனது பயணத்தை தொடர்ந்தது. போதிய வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இயலாத காரணத்தால் 2009 இல் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்த வேண்டியதாகி விட்டது.

                  கையெழுத்து சஞ்சிகை என்பது ஒரு பிரதி தான் உருவாக்கப் படும். அதாவது என் கையெழுத்தில் உருவாக்கப்படும் நேரடிப் பிரதி ஒன்றைத்தான் ஒவ்வொரு வாசகரிடமும் எடுத்துச் சென்று வாசிக்கும் படி வழங்க வேண்டும். ஒருவரிடம் கொடுத்து அவர் வாசித்த பின் அவரிடம் இருந்து மீளப்பெற்று அடுத்த வாசகரிடம் கொடுக்க வேண்டும். இச்சுழற்சி முறையானது அடுத்த சஞ்சிகை வெளியிடப்படும் வரை நிகழும். அடுத்த சஞ்சிகை வெளியிட்ட பின் இதே முறையில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மிகக் கடினமான பணிதான். ஆனாலும் பாடசாலைக் காலத்தில் ஓரளவுக்கு இலகுவாக இருந்தது. ஏனெனில் எனது வகுப்பறை மற்றும் பக்கத்து வகுப்பறைகளை கையெழுத்து சஞ்சிகையின் விநியோக மையங்களாக உபயோகித்துக் கொண்டேன்.

              பாடசாலைக் காலத்தின் பின் இது மிகக் கடினமான பணியானது. 2009 ஆகஸ்ட்டில் எனது பாடசாலைக் காலம் நிறைவடைந்தது. நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் எங்கள் வகுப்பில் / தரத்தில் கல்வி கற்றனர். அவ்வாறான சுமார் 100 வாசகர்களே "சிகரம்"  கையெழுத்து சஞ்சிகையின் வாசகர்களாக இருந்து வந்தனர். பாடசாலைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களில் முக்கால் வாசிப்பேர் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்விட்டனர். ஆகவே எனது ஊரை அண்டிய - மிகக் கிட்டிய பிரதேச நண்பர்களையே எனது வாசகர்களாக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேரளவில் தான் இருக்கும்.


 

                       ஒவ்வொருவர் வீடுகளையும் தேடிச் சென்று கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று பிரதியை வாங்கிக் கொண்டு அடுத்த வாசகரின் இல்லம் நாடிச் செல்ல வேண்டும். வெயில், மழை மற்றும் தூரம் பாராது இப்பணியை சிலகாலம் முன்னெடுத்தேன். ஆனால் போதுமான வாசகர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் 100 வது பிரதியுடன் "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்தினேன்.

                   பாடசாலைக் காலத்திலேயே இலங்கையிலிருந்து வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகள், நாளிதழ்களுக்கு ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்தேன். ஆகவே அதனை தொடர்ந்து செய்தேன். 75 க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியிருக்கிறேன். பின்பு " தூறல்கள்" வலைத்தளத்தின் வாயிலாக செப்டெம்பர் 03, 2010 இல் கால் பதித்தேன். தொடர்ந்து மே 02, 2012 இல் "சிகரம்" வலைத்தளம் வாயிலாக பயணத்தைத் தொடர்கிறேன்.  ஜூலை 01, 2012 முதல் "கவீதாவின் பக்கங்கள்" வலைத்தளம் வாயிலாக என் தோழியின் கவிதைகளை அவரின் பிரதிநிதியாக இருந்து அவரது கவிதைகளை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.

                  அத்துடன் இன்று மற்றுமொரு தளத்திலும் "சிகரம்" கால் பதிக்கிறது. அதாவது "சிகரம்" தனது செய்தி வலைத்தளமாக "சிகரம் 3" இனை அறிமுகம் செய்கிறது.   அரசியல், விளையாட்டு, சினிமா , அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த செய்திகளை [ஏனைய செய்தி வலைத்தளங்கள் / இணையத்தளங்கள் போல நிறைய பதிவுகளை வெளியிடாமல்] நாளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெளியிட தீர்மானித்துள்ளேன். முக்கியமான, பயனுள்ள விடயங்கள் மட்டுமே பகிரப்படும்.

 

                             இந்த நன்னாளில் எனது பெற்றோர் , பாடசாலை நண்பர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், பிரதேச எழுத்தாளர்கள், வலைத்தளம் மற்றும் முகநூல் [Facebook ] , டுவிட்டர் மற்றும் இன்ன பிற சமூக வலைத்தள நண்பர்கள் ,  திரட்டிகள் மற்றும் என் நலனில் அக்கறையுடையோர் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது பயணத்தின் முடிவிடமல்ல, ஒரு தரிப்பிடம். அவ்வளவுதான். இதோ புறப்பட்டுவிட்டேன், அடுத்த தரிப்பிடத்தை நோக்கி... ஒவ்வொரு தரிப்பிடங்களையும் நான் சென்றடையும் வரை என் நன்றிக்குரிய அனைவரிடமிருந்தும் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறேன்.

அதுவரை 
என்றும் 
உங்கள் அன்பின் 
சிகரம்பாரதி.   

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?