விறல்வேல் வீரனுக்கோர் மடல்!

                           அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.

                    முதலில்  உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா? மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே!

                            விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் புதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண  செய்ய வேண்டுகிறேன்.

                         கடிதம் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல. அது ஒரு அழகிய கலை. சில சரித்திரங்களின் பின்னால் பல கடிதங்கள் உள்ளன. இன்று பலருக்கு 'வாட்ஸப்' தெரிந்திருக்கும் அளவுக்கு கடிதங்கள் பற்றித் தெரியாது. மிக நீண்ட சிந்தனைக்குப் பின்னரே இக்கடிதம் உன்விழிகளைச் சேர்கிறது. இதற்கு முந்திய பந்திகள் இரண்டும் 'வானவல்லி' வெளியாவதற்கு முன் எழுதப்பட்டவை. இப்போது திருத்தங்களுடன் இங்கே. கடிதம் எழுதுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்றாலும் இதுவரை ஒன்றிரண்டு கடிதங்களுக்கு மேல்  எழுதியதில்லை. முதல் முறையாக கடல் கடக்கிறது என் கடிதம். மகிழ்ச்சி!  வேலை வேலை என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வது மிகச் சிரமமான காரியமாகிவிட்டது. அதுவே இக்கடிதத்தின் தாமதத்திற்கு காரணம்.

                    இந்தியாவில் திரைத்துறைக்கு இருக்கும் சக்தி வேறெதற்கும் இல்லை போலும். கபாலி திரைப்பட வழக்கில் 'நீதி' வழங்கப்பட்ட வேகத்தில் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமாயின் நீதித்துறை சக்திமிக்க துறையாக மாறும் என்பதில் ஐயமில்லை. சென்னையில் காலை வேளையில் மக்கள் முன்னிலையில் சுவாதி என்னும் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சுவாதியின் புகைப்படங்களை இணையத்தளங்களில் பகிர வேண்டாம் என்றோ அல்லது சுவாதி தொடர்பில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றோ நீதிமன்றம் உத்தரவிட்டதா? இல்லை. மாறாக 'கபாலி' திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை விதித்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது?

                       நிற்க, உங்கள் வாழ்க்கை நிலவரங்கள் எப்படி? எழுத்துப்பணிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன? 'வானவல்லி' புதினம் குறித்து உங்கள் நண்பர்களின் அபிப்பிராயங்கள் என்ன? பெற்றோரின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்தது? புதினத்தை வாசித்தார்களா? வாசகர்களின் எண்ணங்கள் என்ன சொல்கின்றன? மடல்கள் ஏதும் இல்லம் தேடி வந்ததா? கடிதங்கள் என்ன சொல்கின்றன? உங்கள் வானவல்லி என்ன சொன்னார்கள்? வானவல்லிக்கு வானவல்லி பிடித்திருக்கிறதா? இதென்ன இத்தனை கேள்விக்கணைகளா என்று திகைக்க வேண்டாம். இன்னும் இருக்கிறது. வானவல்லி சிறப்பு நேர்காணலுக்காக சில பல கேள்விகள்  மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.



வானவல்லியைத் தொடர்ந்து எழுத்தில் இருக்கும் அம்சம் என்ன? அது தொடர்பில் தகவல்களை எதிர்பார்க்கிறேன். கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருளவும். வரும் மடல்களில் பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன். பதில் கடிதத்தின் பின் மறுமொழி மூலம் சந்திக்கிறேன். நன்றி.

இப்படிக்கு,
நண்பன்
சிகரம்பாரதி.

Comments

  1. சூப்பர்... உனக்கு என ஆரம்பித்து இடையில் உங்களுக்கு என புகுத்தியதை தவிர்த்திருக்கலாம்... இல்லை எடுத்த உரிமையை திரும்பக் கொடுத்துவிட்டீர்களா :-)

    ReplyDelete
  2. வணக்கம் நண்பா...

    விரைவில் தங்களது நேர்காணல் கேள்விகளுடன் உங்களுக்கான பதில் கடிதத்தில் சந்திக்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!